சென்னையில் இருக்கர வாகனத்தில் வெடி மருந்து கொண்டு சென்றதாக எல்லப்பன் என்ற ரவுடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த ரவுடி எல்லப்பன். இவர் திருவல்லிக்கேணிப் பகுதி நடேசன் சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் இருசக்கர வாகனம் தீடீரென அதிக சத்ததுடன் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தால் மற்றொரு இருசக்கர வாகனம் சேதமடைந்ததோடு, அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
இதையடுத்து படுகாயமடைந்த எல்லப்பன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். ஆய்வில், வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான ரசாயன மருந்துகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதனால் எல்லப்பன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், எதற்காக வெடிமருந்து கொண்டு செல்லப்பட்டது மற்றும் எங்கிருந்து அவை பெறப்பட்டது என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.