சென்னை கொளத்தூரில் குடும்பத் தகராறில் பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதாகவும், போலீசார் இந்த விவகாரத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி காவல் நிலையம் எதிரே பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மூத்த மகள் மஞ்சுளா, இளைய மகள் சரண்யா. இந்த நிலையில் இளைய மகள் சரண்யாவுக்கும் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யா தமது தாய் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், மனைவியின் தாய் வீட்டுக்கு வந்த கார்த்திக், சரண்யாவை தம்முடன் வாழ அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய் தகராறை சமாதானம் பேச வந்த சரணயாவின் அக்கா மஞ்சுளாவை கத்தியை காட்டி மிரட்டி கார்த்திக் இருசக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், கார்த்திக்கின் வீட்டில் மஞ்சுளா தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிய உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, மஞ்சுளாவின் தாயார் ஜெயா, தமது மகளை அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம் ஆடுவதாக கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, மஞ்சுளாவின் உறவினர்கள் மாதவரம் காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.