தமிழ்நாடு

சென்னை: மழை குறைந்ததால் ஏரிகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குறைப்பு

Veeramani

மழை குறைந்ததால், சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும், ஏரிகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியில், ஆயிரத்து 81 மில்லியன் கன அடியில், தற்போது 755 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதால், கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3ஆயிரம் மில்லியன் கன அடியில், தற்போது 2ஆயிரத்து 902 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதால், நீர்த் திறப்பு 100கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2ஆயிரத்து 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3ஆயிரத்து 465 மில்லியன் கன அடியில் தற்போது 3ஆயிரத்து 151 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதால், நீர்த் திறப்பு 125 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.