சென்னை புளிந்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது என புகார் எழுந்தது, இதைதொடர்ந்து அமைச்சர்கள் ஆய்வு செய்து ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளும் தரமற்று இருப்பதாக அந்த குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கே.கே நகர் கோட்டம் மூலம், ராமாபுரம் பாரதிசாலையில் 78 கோடியே 44 லட்சம் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிபிரிவு மூலம் கட்டி பயனாளர்களுக்கு 01/11/2019 அன்று ஒப்படைப்பு செய்யப்பட்டது. இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன .
கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள்,கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் இங்குள்ள அனைவரும் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.