தமிழ்நாடு

தண்ணீர் இல்லாமல் முடங்கிய அரசு கழிப்பறைகள் - மக்கள் அவதி

தண்ணீர் இல்லாமல் முடங்கிய அரசு கழிப்பறைகள் - மக்கள் அவதி

webteam

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் பல்வேறு அரசு பொதுக்கழிப்பிடங்கள் நீரற்ற நிலையில் உள்ளன.

தமிழகத்தில் கடும் வெயில் மற்றும் மழையின்மை காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் தவித்து வருகின்றனர். குடிப்பதற்கு, குளிப்பதற்கு, கழிவறை செல்வதற்கு கூட தண்ணீரின்றி பலர் தவித்து வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் மக்கள் குடங்களுடன் தெருத்தெருவாக அலைந்து வருகின்றனர். நடு இரவில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கின்றனர். விடிய விடிய குடங்கள் தண்ணீருக்காக குடங்களுடன் வரிசையில் தவம் கிடக்கின்றனர். 

சென்னையில் சில ஐடி நிறுவனங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறப்பட்டது. மேலும் பல உணவங்களில் நீரின்றி மதிய உணவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் தண்ணீர் பிரச்னை நீக்க முழு மூச்சில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மினி வேன்கள் மூலம் சிறுகுறு தெருக்களிலும் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தண்ணீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் சென்னையிலுள்ள சில பொதுக்கழிப்பிடங்கள் தண்ணீரற்ற நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் வசிக்கு மக்கள் கழிவறைகளை பயன்படுத்த முடியாத சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் கழிவறை தண்ணீரற்ற நிலையில் இருக்கிறது. இதேபோன்று சேத்துப்பட்டு மேம்பாலம் சிக்னல் அருகே உள்ள அரசு பொதுக் கழிவறையிலும் நீரற்ற நிலை உள்ளது. மேலும் பல பகுதி கழிவறைகளின் நிலைமை இதேதான். இப்படி தண்ணீர் இல்லாத நிலையால், அந்தக் கழிவறைகள் துர்நாற்றம் வீசும் நிலையிலும், மக்களுக்கு நோய் பரப்பும் நிலையில் காணப்படுகிறது.