தமிழ்நாடு

விடுமுறையில் பெற்றோருக்கு வீட்டுப்பாடம் கொடுத்த பள்ளி!

webteam

சென்னையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று பெற்றோர் விடுமுறையில் மேற்கொள்ளவுள்ள வீட்டுப்பாடங்களை வழங்கியுள்ளது.

சென்னை சிட்லபாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விடுமுறையில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புறை படிக்கும் மாணவர்களின், பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

அவை :

தினந்தோறும் இரண்டு வேளையாவது உங்கள் குழந்தைகளுடன் சாப்பிடுங்கள். அவர்களுக்கு விவசாயிகள் படும் கஷ்டத்தை எடுத்துக்கூறுங்கள் உணவை வீணாக்கக்கூடாது எனக்கூறுங்கள்.

குழந்தைகள் சாப்பிடும் தட்டுகளை, அவர்களையே சுத்தம் செய்யச்சொல்லுங்கள். உழைப்பாளிகளின் கண்ணியத்தை புரியவையுங்கள்.

நீங்கள் சமைக்கும் போது அவர்களை உதவி செய்ய அனுமதியுங்கள். அவர்கள் சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்கள் கலவையை தயாரிக்கப் பழக்குங்கள்.

தினமும் 5 புதிய ஆங்கில வார்த்தைகளை பழக்குங்கள். அவற்றை எழுதவும் சொல்லுங்கள்.

தினமும் மூன்று அக்கம்பக்கதினர் வீட்டிற்கு அழைத்துச்செல்லுங்கள். அவர்களுடன் பழகும் விதம் குறித்து கற்றுக்கொடுங்கள்.

தாத்தா,பாட்டியிடம் அழைத்துச்சென்று, அன்புடன் பழகச்சொல்லுங்கள். அவர்களின் அன்பும், குணமும் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். அவர்களுடன் புகைப்படங்கள் எடுக்கச்சொல்லுங்கள்.

அவர்களை நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச்செல்லுங்கள். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் கடினமாக உழைப்பதை அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

உங்கள் ஊரில் நடக்கும் விழாக்கள் மற்றும் சந்தைகளுக்கு தவறாமல் அழைத்துச்செல்லுங்கள்.

குழந்தைகள் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்துங்கள். மரங்கள் மற்றும் செடிகள் தொடர்பான அறிவு, உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் சிறுவயது அனுபவங்கள் மற்றும் குடும்ப பாரம்பரியங்களை பகிருங்கள்.