சென்னையில் கைவிலங்குடன் தப்பியோடிய கைதி, தாயை பார்க்க வந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 15ம் தேதி இரவு சென்னை, பாண்டிபஜார் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தி.நகர் பிரகாசம் சாலையில் இந்தியன் வங்கிக்கு அருகில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் சென்னை டிபி சத்திரம் கேவிஎன் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற ‘சீஸ் டப்பா’ (23) என்பதும், அவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் பல மாதங்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் என்பதையும் காவலர்கள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். மறுநாள் 16ம் தேதி காலையில் பாண்டிபஜார் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி விட்டுச்சென்றார். அப்போது அவர் மீது சென்னை தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது கைக்கு விலங்கு பூட்டி ஆய்வாளரின் அறைக்கு அருகில் அமரவைத்திருந்தனர்.
அப்போது மணிகண்டன் திடீரென கைவிலங்குடன் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் இருந்து வெளியே தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் அதற்குள் பனகல்பார்க் வழியாக ஓடிச்சென்று தெருக்களுக்குள் புகுந்து கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டார். இதுகுறித்து பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைவிலங்குடன் தப்பியோடிய மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மணிகண்டன் டிபி சத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு அவர் வருவதற்கு வாய்ப்பு இருக்க கூடும் என காவலர்கள் கருதினர். அதனால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு, மணிகண்டன் தனது வீட்டுக்கு வருகிறாரா? என்பதை நோட்டமிட்டனர். காவல்துறையினர் எதிர்பார்த்தபடியே, இன்று மணிகண்டன் தனது அம்மாவை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவலர்கள், அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, பாண்டிபஜார் காவல்நிலையத்தில் தனது கையில் பூட்டப்பட்ட கைவிலங்கை கழற்றி, அதேபகுதியில் உள்ள சத்தியா நகர் கூவத்தில் போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.