தமிழ்நாடு

பைக்கின் பின் சீட்டில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் - சென்னை காவல்துறை எச்சரிக்கை

Sinekadhara

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலை விபத்தில்லா சென்னை என்ற நிலையை ஏற்படுத்த சிறப்பு வாகன தணிக்கையையும் போக்குவரத்து காவல் துறைசெயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் வாகனங்கள் நிறைந்த நகரங்களில் சென்னையும் ஒன்று. இதற்கேற்ப வாகன விபத்துகளும் சென்னையில் அதிகம். சென்னை மாநகரத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 98 பேர் இந்தாண்டில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் 611 பேர் உயிரிழந்த நிலையில் 3 ஆயிரத்து 294 பேர் காயம் அடைந்தனர். இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் இன்றி சென்று உயிரிழந்த 611 பேரில் 477 பேர் அதை ஓட்டியவர்கள் என்றும், 134 பேர் பின்னால் அமர்ந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கையை தொடங்கியுள்ளனர். சாலை விதிகளை மீறுபவர்கள் கண்காணிக்கப்படுவதுடன் ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பரப்புரையையும் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நிலையை ஏற்படுத்தவும் தங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.