இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்தது டெல்லியைச் சேர்ந்த ஒரே மொத்த டீலர்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை அதிரவைத்த மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக இருந்து வந்த டெல்லியை சேர்ந்த விகாஸ் மைதீன், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் வெங்கடேசன், வெங்கடேசனின் மனைவி ஜான்சி மெரிடா, லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி நரசிம்மன், முருகன் உட்பட மொத்தம் 11 நபர்களை மாதவரம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட 17.8 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரூ.18 கோடி மதிப்புக்கொண்ட மெத் போதைப்பொருள் விவகாரத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் வெங்கடேசனுக்கு மெத் போதைப்பொருளை டெல்லியில் இருந்து மருந்து பொருட்களுடன் அனுப்பியது டெல்லியைச் சேர்ந்த விகாஸ் மைதீன் என்பது தெரிய வந்தது.
மேலும், இந்த போதைப்பொருட்கள் மணிப்பூர் 'முர்ரே' பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வரும் விகாஸ் மைதீனின் சகோதரர் விக்ரம் மைதீன் என்பவர் மெத் போதைப்பொருளின் மூலப்பொருளான சூடோஃபெட்ரின் கெமிக்கலை, மெடிக்கல் பொருட்களுடன் கலந்து டெல்லியிலுள்ள விகாஸ் மைதீனுக்கு அனுப்புவதும், பின் விகாஸ் மைதீன், அதனை மெத் போதைப்பொருளாக மாற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துவதும் தெரியவந்தது.
விகாஸ் மைதீனிடமிருந்து சென்னையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் வெங்கடேசன் கடத்தி, அதனை இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இதே போல சென்னை அரும்பாக்கத்தில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல் கும்பல், அரும்பாக்கம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக, கணேசன், மதன், ரவி, ராஜா சத்தியசீலன் ஆகிய ஐந்து நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புக்கொண்ட 39 கிலோ கெட்டமைன் போதைப்பொருள், 50 லட்சம் ரொக்கப் பணம், 105 கிராம் தங்க நகைகள், ஐந்து துப்பாக்கிகள் 79 தோட்டாக்கள், 5 செல்போன்கள் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இரண்டு எடை மெஷின்கள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள், 1.4 கிலோ மெத்தபெடைமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜா என்பவர் சென்னையில் செயல்பட்டு வரும் பல்வேறு போதைப்பொருள் கும்பல்களில், ஒரு கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டதும், குறிப்பாக இந்த கும்பலுக்கும் இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் சந்தேகித்துள்ளனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா "கஞ்சிபாணி இம்ரான்" என்பரோடு, கைதாகியுள்ள ராஜாவிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் "கஞ்சிபாணி இம்ரானின்" கூட்டாளிகள் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டு வருவதை பல நாட்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ராஜா என்பவர் டெல்லியைச் சேர்ந்த விகாஷ் மைதீன் மற்றும் அவரது சகோதரர் விக்ரம் மைதீன் ஆகியோரிடமிருந்து பெருமளவில் சூடோஃபெட்ரின் கெமிக்கல் வாங்கி அதனை மெத் போதைப்பொருளாக மாற்றி சர்வதேச டீலர்களோடு விற்பனை செய்து வந்ததையும் கண்டறிந்தனர்.
யார் இந்த விகாஸ் மைதீன் மற்றும் விக்ரம் மைதீன்? என அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, விகாஸ் மைதீன் ஏற்கனவே மாதாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அரும்பாக்கம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து விகாஸ் மைதீனின் நெட்வொர்க்கை கண்டறிய மாதாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விகாஷ் மைதீனை அரும்பாக்கம் போலீசார் நேற்று முந்தினம் கைது செய்தனர்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ராஜா மற்றும் போதைப்பொருள் கடத்தலின் மொத்த டீலரான டெல்லியைச் சேர்ந்த விகாஸ் மைதீன் உள்ளிட்ட நபர்களின் பின்னணியை கண்டறிய பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ராஜா, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கணேசன், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவி, டெல்லியைச் சேர்ந்த விகாஸ் மைதீன் ஆகிய 4 நபர்களை அரும்பாக்கம் போலீசார் 6 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்துள்ளனர்.
இதேவேளையில், மாதாவரம் போலீசாரால் ரூ.18 கோடி மதிப்புள்ள மெத் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 நபர்களில் சண்முகம், லட்சுமி நாராயணன், லாரன்ஸ், சாகுல் ஹமீது ஆகிய நான்கு நபர்களை நான்கு நாட்கள் மாதவரம் போலீசார் இன்று "போலீஸ் கஸ்டடி" எடுத்துள்ளனர்.
ஏழு நாட்கள் "போலீஸ் கஸ்டடி" கேட்ட நிலையில் நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுத்து NDPS நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதே வழக்கில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் வெங்கடேசன் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது மேலும், நான்கு நபர்களை 4 நாட்கள் மாதவரம் போலீசார் கஸ்டடி எடுத்துள்ளனர்.
சென்னையை அதிர வைத்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும் இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் உள்ளிட்ட நபர்களை அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதவரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் போதைப்பொருள் மொத்தமாக விற்பனை செய்து வந்தது டெல்லியைச் சேர்ந்த விகாஸ் மைதீன் என்பவர் எனவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததை எடுத்து தற்போது விகாஸ் மைதீன், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனான ராஜா மற்றும் மற்றொரு வழக்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனான வெங்கடேசன், சண்முகம் ஆகிய நபர்களை தனித்தனியாக அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதவரம் போலீசார் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ராஜா சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான "கஞ்சிபாணி இம்ரான்" உடன் தொடர்பில் இருந்ததும், அதே போன்று இரண்டு போதைப்பொருள் கும்பலுக்கும் போதை பொருள் சப்ளை செய்த விகாஷ் மைதீன் சர்வதேச போதை கும்பல் தலைவன் "கஞ்சிபாணி இம்ரான்" உடன் நேரடி தொடர்பில் இருந்ததும் போலீசாரின் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை அதிர வைத்த இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளின் பின்னணி குறித்தும்? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் குறித்தும் தற்போது சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை(NIA) அதிகாரிகளும் இந்த போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்த விவரங்களை திரட்டி வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.