தமிழ்நாடு

“சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை”- சென்னை போலீசார் விளக்கம்

“சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை”- சென்னை போலீசார் விளக்கம்

webteam

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

இதற்கிடையே வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து ட்வீட் செய்துள்ள சென்னை போலீசார், ''70 வயது மதிக்கத்தக்க பெரியவர் இயற்கையாக மரணம் அடைந்ததை, வண்ணாரப்பேட்டை CAA போராட்டத்தின்போது இறந்துவிட்டதாக சிலர் தவறுதலாக வேண்டுமென்றே பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். யாரும் இறக்கவில்லை. எச்சரிக்கை தேவை. இறந்துவிட்டார் என்ற பொய்த் தகவலை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்'' என தெரிவித்துள்ளனர்.