முகாமில் தங்கியுள்ள குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பெருமழை வெள்ளம் காரணமாக தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்குவதற்காக தமிழக அரசு நிவாரண முகாமை பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமை பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதையடுத்து முகாமில் உள்ள மோனிகா என்ற ஒருவயது பெண் குழந்தைக்கு இன்று பிறந்தநாள் என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, துரைப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து அந்த ஒருவயது பெண் குழந்தைக்கு புத்தாடை சாக்லேட் பலூன், கேக் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அந்த முகாமில் உள்ள நபர்களோடு சேர்த்து குழந்தையின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த சம்பவம் அந்த முகாமில் தங்கியிருப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.