மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சென்னை ஐஐடியில் சென்னை காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் சராவியு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
இவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பத்தில் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் பாத்திமாவின் போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. தன்னுடைய பேராசிரியர்கள் சிலர்தான் காரணம் என்று அவர் செல்போனில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பாத்திமா உயிரிழப்பை முறையாக விசாரிக்க வேண்டுமென அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கேரள முதல்வரை சந்தித்து அவர் உதவியும் கோரியுள்ளார்.
இதற்கிடையே, மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி வேண்டி, சென்னை ஐஐடியை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை ஐஐடிக்கு வருகை தந்து, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்தினார்.