செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடுத்த கோவிலம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் வினோத் (32). இவரது வீட்டு வாசலில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் திடீரென பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில், வீட்டுக்கு வெளியே நின்றிருந்த பிரதீப் (11) என்ற சிறுவன் காயம் அடைத்தார். சத்தம்கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், இதேபோல் கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், 7வது தெருவில் வசித்து வரும் நித்தியானந்தன் (40) மற்றும் பெரியார் நகர் ஆகிய இரண்டு இடங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கோவிலம்பாக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மூன்று குடும்பத்தினரும் மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதோடு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறனர்.