தமிழ்நாடு

ரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய மாணவர்கள் பிணையில் விடுவிப்பு

webteam

சென்னையில் மின்சார ரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. திருத்தணி செல்வதற்காக பயணிகளுடன் தண்டவாளத்தில் காத்திருந்தது அந்த ரயில். அங்கு வந்த இளைஞர்கள் சிலர் ரயில் முன்பு ஒரு பேனரை கட்டினர். அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள், அவர்கள் யார்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பதைக் காட்டியது. 

அதில் பச்சையப்பன் கல்லூரி ஆயுத பூஜை என அச்சிடப்பட்டிருந்தது. "அன்பு, அராஜகம், வெட்டுக்குத்து", "தி பாய்ஸ் ஆர் பேக்” (THE BOYS ARE BACK), அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். இவையெல்லாம் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகன் பேசும் பன்ச் வசனங்கள் அல்ல. இந்தியாவின் வருங்காலத் தூண்களான மாணவர்கள், தங்களைப் பற்றி தாங்களே அச்சடித்து எடுத்து வந்த பில்டப் வாக்கியங்கள். ஆயுத பூஜை அன்று மற்ற வாகனங்களையெல்லாம் கழுவி மாலை அணிவிப்பது பெரும்பாலானோரின் வழக்கம். 

ஆனால் ரயிலுக்கு யாரும் ஆயுத பூஜை கொண்டாடவில்லையே என்ற ஏக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இருந்ததோ என்னவோ? அதற்கு ஆயுத பூஜை கொண்டாட வந்திருந்தனர். மாணவர்களின் செயல் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேரை கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். எதிர்காலத்தில் விமானத்தின் முன் பேனர் கட்டி ஆயுத பூஜை கொண்டாட சிலர் முயலலாம். யார் கண்டது???