சென்னை எண்ணூர் பகுதியில் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட எண்ணெய் படலம் கடல் நீரோட்டத்தினால் கடலூர் பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது.
சென்னை எண்ணூர் பகுதியில் கடந்த 28-ஆம் தேதி காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் கடற்பரப்பில் பரவியது. இந்த எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் அரசு மட்டுமின்றி, மாணவர்கள், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னைக் கடல் பரப்பில் பரவிய கச்சா எண்ணெய் கடல் நீரோட்டத்தினால் தற்போது கடலூர் பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களாக எண்ணெய் படலம் அதிகமாக பரவி வருவதனால் கடலில் துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கு மீன்கள் இல்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எண்ணைப் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம் உள்ளிட்ட 49 மீனவ கிராம மக்கள், எண்ணெய் படலத்தை சுத்தப்படுத்த இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர்.