தமிழ்நாடு

சென்னை: மீண்டும் பணி வழங்க வேண்டுமெனக் கோரி செவிலியர்கள் மெரினாவில் போராட்டம்

kaleelrahman

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3200 தற்காலிக எம்ஆர்பி செவிலியர்களில் 800 செவிலியர்களை மட்டும் பணிநீக்கம் செய்ததை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ தேர்வாணையம் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3200 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அதில், 2400 செவிலியர்கள் நிரந்தர ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்படுவர் எனவும் மீதமுள்ள 800 செவிலியர்களை எதிர்காலத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு பணியமர்த்தபடுவார்கள் என கடந்த மார்ச் 8ஆம் தேதி அரசு தரப்பில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 800 செவிலியர்களை பணியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் விடுவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணியிலிருந்த செவிலியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், டிஎம்எஸ் வளாகத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களை முன்கூட்டியே கைது செய்த காவல் துறையினர் தேனாம்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அண்ணா, கருணாநிதி நிறைவிடங்களின் அருகில் போராட முயன்றபோது அவர்களும் காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இவர்களை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் அடைத்துள்ளனர். தமிழக முதல்வர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.