அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் பங்கேற்ற செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் டிஎம்எஸ் வளாகத்தில் மற்றொரு தரப்பு செவிலியர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று முன்தினம் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதில் பங்கேற்ற செவிலியர்கள் தெரிவித்தனர். முழு மனநிறைவுடன்
போராட்டத்தை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் பணிக்கு திரும்பவுள்ளதாகவும் ஒருதரப்பு செவிலியர்கள் கூறினர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பு செவிலியர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசாணை 191-ஐ வெளியிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனக் கூறிய அவர்கள் எச்சரிக்கை நோட்டீஸை பொருட்படுத்தப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் அவர்களது போராட்டம் நேற்றிரவும் இரண்டாவது நாளாக விடிய விடிய நடைபெற்றது. கொட்டும் பனியில் அவர்கள் தங்களது போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.