சென்னை நீலாங்கரை காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். திருட்டு வழக்கு விசாரணைக்காக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தோணிராஜ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் தாக்கியதால்தான் அந்தோணிராஜ் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில், உடல்நலக்குறைவே காரணம் என்று காவல்துறை கூறியுள்ளது. இந்தச்சூழலில் அந்தோணிராஜ் உயிரிழப்பு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விசாரணை கைதிகளின் சர்ச்சைக்குரிய மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு இதே நீலாங்கரை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டான். தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் 2016-ம் ஆண்டு புழல் சிறையில் உயிரிழந்தார். அதே ஆண்டு திருட்டு வழக்கு விசாரணைக்காக கண்ணகிநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லபட்ட கார்த்திக் என்பவர் உயிரிழந்தார்.
லாக்கப் மரணங்கள் மட்டுமின்றி சிறை மரணங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. 2017-ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நாகராஜ் என்பவர் இறந்து போனார். வழக்கு விசாரணை ஒன்றில் 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 157 சிறை மரணங்கள் நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு தெரிவித்தது. 157 இறப்புகள் குறித்தும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணைக்குப்பின் 134 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது.