தமிழ்நாடு

சென்னை அருகே புதிய விமானநிலையம் : விவசாயிகள் கவலை

webteam

காஞ்சிபுரம் அருகே அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலமாக உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அதை சமாளிக்க ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய விமான நிலையம் அமையவிருக்கிறது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள வளத்துார், பரந்துார், நெல்வாய், உள்ளிட்ட ஆறு வருவாய் கிராமங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் உள்ளிட்ட ஆறு வருவாய் கிராமங்கள் என மொத்தம் 12 வருவாய் கிராமங்கள் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80%க்கும் மேல் விவசாய நிலங்களாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்களை நம்பியே வாழ்ந்து வரும் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நகர வளர்ச்சி என்ற பெயரில், கிராமத்தின் வளர்ச்சியை அழிக்கக் கூடாது என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், உடனடியாக விமான நிலையத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கேட்டபோது, இரண்டாவது விமான நிலையம் அமைய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாகவும், ஆனால் விமானப்போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான எந்த ஒரு உத்தரவும் தற்போது வரை பிறப்பிக்கப்படவில்லை எனக் கூறினார்.