தமிழ்நாடு

விருந்துக்கு அழைத்து அக்கா கணவர் செய்த செயல்- வீடு திரும்பியதும் அதிர்ந்துபோன தங்கை கணவர்

PT

மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் இருவரையும் விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு அவர்கள் வந்ததும், மனைவியின் தங்கை வீட்டுக்குச் சென்று திருடிய அக்காவின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் அப்பாசாமி கோவில் தெருவில் வசித்து வரும் ஸ்ரீதர் மகன் நரேந்திரன் என்பவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது. நரேந்திரன் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கே.கே. நகரில் அமைந்துள்ள மனைவியின் அக்கா வீட்டிற்கு விருந்திற்காக நரேந்திரன் சென்றுள்ளார். மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு தம்பதி இருவரும் அங்கே தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நரேந்திரனின் மனைவியின் அக்கா வீட்டுக்காரரான சுரேஷ், ‘மயிலாப்பூர் சென்று வரவேண்டும்; உங்கள் வீட்டு சாவியை தாருங்கள்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நரேந்திரனின் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை திருடிவிட்டு கோயம்புத்தூர் சென்றுள்ளார் சுரேஷ். விருந்து முடித்துவிட்டு நரேந்திரன் மற்றும் அவரது மனைவி தாலி பிரித்து போடவேண்டும் என்பதற்காக, வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை காணாமல் போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நரேந்திரனின் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தபோது அக்கா வீட்டுக்காரர் சுரேஷ் வந்து சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து செல்ஃபோன் டவரை மையப்படுத்தி விசாரணை செய்ததில் அவர் கோயம்புத்தூர் சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். மேலும் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.