தமிழ்நாடு

விதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி

விதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி

webteam

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் விதிமீறல் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் குறிப்பாக சென்னையின் முக்கிய சாலைகளில் பேனர்கள் வைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் டிராபிக் ராமசாமி கூடுதல் மனுக்களை தாக்கல் செய்தார்.

இதுகுறித்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள் கடந்த 5 ஆண்டுகளாக பேனர்கள் விவகாரத்தில் போட்ட உத்தரவுகளையும் விதிமுறைகளையும் அதிகாரிகள் மதிப்பதில்லை எனக் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அறிக்கையில் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் பேனர்கள் வைத்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கபடவில்லை எனவும் தெரிவித்தனர். 

விதிமீறல் பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் இணைய வேண்டியது தானே எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

விண்ணப்பிக்கும் நபர், பிரிண்ட் நிறுவனத்தின் பெயர் பேனரில் இடம்பெற வேண்டும் என்பதை பின்பற்றவில்லை. பேனரில் விவரங்கள் இடம்பெற வேண்டும் என்ற விதியை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை இல்லையா எனக் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற கண்டனத்தின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்படும் பேனர்களின் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடவேண்டும் எனவும் பேனரின் கீழ் பகுதியில் அனுமதி எண், அனுமதிக்கான அவகாசம், நீளம் - அகலத்தை குறிப்பிட வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் அத்தகைய பேனர்கள் விதிமீறலாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.