தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில்: திரைப்படங்கள் பார்க்கும் வசதி அறிமுகம்

webteam

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ நிர்வாகம் உருவாக்கியுள்ள ‘சுகர்பாக்ஸ்’ (SugarBox) என்ற செயலி மூலமாக காணொளிகளைக் காணமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் உள்ள வைஃபை (WIFI) வசதியைக் கொண்டு ‘சுகர்பாக்ஸ்’ செயலியில் பதிவிடப்பட்ட காணொளிகளை ரசிக்க முடியுமென மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள காணொளிகள் ‘சுகர்பாக்ஸ்’ செயலியில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தக் காணொளிகளை தரவிறக்கம் செய்யும் வசதியும் ‘சுகர்பாக்ஸ்’ செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுகர் பாக்ஸ் செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் (IOS) ஆகிய இயக்குதளங்களில் செயல்படும் வசதியை கொண்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் ‘சுகர்பாக்ஸ்’ செயலியை பயன்படுத்த இயலும் எனவும், விரைவில் இந்தத் திட்டம் அனைத்து வழிதடங்களிலும் அறிமுகப்படுத்தப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.