தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...!

webteam

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதலாம் கட்ட வழித்தடத்தில் இன்றும் இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ‌ரயில் சேவை கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதலாம் கட்ட வழித்தடத்தில் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் என 32 ரயில் நிலையங்‌கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாகவும், பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் முதலாம் கட்ட வழித்தடம் முழுவதும் இலவசமாக ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. 

அதன்படி 4-வது நாளாக இன்றும் (13-02-2019) மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் நேற்று முன்தினம் முதல் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வண்ணாரப்பேட்டை டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.