தமிழ்நாடு

சென்னை மெட்ரோ: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறதா வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் வழித்தடம்?

Veeramani

சென்னை மெட்ரோ ரயிலின் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் முதலாம் கட்ட நீட்டிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. ஜனவரி மாதம் முதல் நீட்டிக்கப்பட்ட வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் முதலாம் கட்ட வழித்தடத்தை பொறுத்தவரை தற்போது சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை இயங்கி வருகிறது. முதலாம் கட்ட வழித்தடத்தை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீடிக்கும் பணி 2016ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. 9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதலாம் கட்ட நீட்டிப்பு வழித்தடத்தில் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வரவுள்ளன..

வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரையிலான 2.4 கிலோமீட்டர் பாதை சுரங்க வழி ரயில் தடமாகவும், கொருக்குபேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 6.6 கிலோமீட்டர், உயர்த்தப்பட்ட வழித்தடமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுரங்கம் மற்றும் உயர் வழித்தடத்தில் தண்டவாளங்கள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களின் கண்ணாடிகள் பொருத்தும் பணி, தொழில்நுட்ப கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில்களை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தும் பணிகள் வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வும் நடைபெறவுள்ளது. இந்த வழித்தடத்தில் 10 மெட்ரோ ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சோதனைகள் நிறைவடையும் சூழலில் வரும் 2021 ஜனவரி மாதம் மெட்ரோ ரயில் முதலாம் கட்ட நீட்டிப்பு வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.