தமிழகத்தில் இன்று பத்துக்கும் மேற்பட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதிகள் வரை நீடிப்பதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.