செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் நட்சத்திர விடுதியான ஹயாத் ஹோட்டலில் நேற்று மாலை பழைய லிப்ட்டை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது லிப்ட் மேலே இருந்து கீழே விழுந்ததில் ஊழியர் சாம் சுந்தர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹோட்டலில் பழைய இரும்பு பொருட்களை கொள்முதல் செய்வதற்காக பெரியமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த நிலையில், ஹோட்டலில் பழைய பொருட்கள் அகற்றும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இவரிடம் லிப்ட் மெக்கானிக்கான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் (37) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை பழைய லிப்ட் ஒன்றை அகற்றிவிட்டு புதிய லிப்ட் மற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது
இந்நிலையில் பழைய லிப்ட்டை அகற்றும் பணியில் ஷாம் சுந்தர் சக ஊழியர்களோடு பணிபுரிந்து வந்துள்ளார். பழைய லிப்ட் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்துள்ளது. அப்போது கீழே பணிபுரிந்து கொண்டிருந்த ஷாம் சுந்தர் மீது லிப்ட் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஒப்பந்ததாரர் அப்துல் காதர் மற்றும் ஹோட்டல் சீஃப் இன்ஜினியர் காமராஜ் ஆகியோர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.