தமிழ்நாடு

1122 பைக்குகளை மார்பில் ஏற்றி கராத்தேவில் உலக சாதனை படைத்த சென்னை மாஸ்டர்!

webteam

கராத்தே சாகசத்தில் சென்னையைச் சேர்ந்த கராத்தே வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். யார் அவர் என்பதை பார்க்கலாம்.

ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரத்து 222 மோட்டார் சைக்கிள்கள் மாஸ்டர் பிரதீப் பாபுவின் மார்பில் ஏறி இறங்கின. அதுவும் 37 நிமிடங்கள் 16 விநாடிகளில். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ஸென் இஷுன்றியூ கராத்தே அசோசியேசன் நடத்திய சாகச நிகழ்ச்சியில், 12 மோட்டார் சைக்கிள்கள் சுழற்சி முறையில் ஒன்றன் பின் ஒன்றாக, பிரதீப் பாபு மார்பில் வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது பாய்ந்து சென்றதைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மிகச்சிறு வயதில் இருந்தே கராத்தே கற்று வரும் பிரதீப் பாபு, 12ஆவது வயதிலேயே மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மாஸ்டராகிவிட்டார். அப்போதே கராத்தேவின் உச்சமான ப்ளாக் பெல்ட்டுடன், அதற்கும் மேல் உள்ள படிநிலைகளில், 5த் டேன் என்று சொல்லக்கூடிய நிலையை அடைந்துவிட்டார்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே கற்றுக்கொடுத்தவர் பிரதீப்பாபுவுக்கு கராத்தே சொல்லிக்கொடுத்தவர் மாஸ்டர் ஹன்ஷி கெரிபாலா. தற்போதைய உலக சாதனையை புரிய ஊக்குவித்தவரும் இவர்தான்.

கடந்த 2009ஆம் ஆண்டே ஆயிரத்து ஒரு மோட்டார் சைக்கிள்களை மார்பில் ஏற்றி உலக சாதனை படைத்த கெரிபாலா தன் உலக சாதனையை தன்னுடைய மாணவர்களில் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்துள்ளது. அதை நிறைவேற்றி இருக்கிறார், அவரது ஆகச்சிறந்த மாணவர், மாஸ்டர் பிரதீப் பாபு.