தமிழ்நாடு

“அன்பால் ஆனது உலகம்”- ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அப்பா’..!

“அன்பால் ஆனது உலகம்”- ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அப்பா’..!

webteam

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட 45-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சென்னையை சேர்ந்த ஒருவர் அடைக்களம் கொடுத்து வருகிறார். 

ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் சாலமன் ராஜ். இவர் தற்போது சென்னையின் கொளத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 1992ஆம் ஆண்டு ஃபெல்வியா சாந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்தனர். 

அப்போது சாலமன் ஒரு முடிவு எடுத்தார். அதாவது அவர் தத்தெடுத்தால், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தையைத்தான் தத்தெடுக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் அவர் தத்தெடுப்பதற்குள் அவர்களுக்கு இயல்பாகவே குழந்தை பிறந்தது. எனினும் சாலமனிற்கு ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ச்சியாக இருந்து வந்தது. இதுதொடர்பாக சமூக செயல்களில் ஈடுபட்டு வரும் நூரி என்ற திருநங்கையிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அந்த நேரத்தில் நூரியிடம் பெற்றோரால் கைவிடப்பட்ட ஹெச்ஐவி பாதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று இருந்தது.

இதனையடுத்து அந்த குழந்தைக்கு அவர் தனது வீட்டில் அடைக்களம் கொடுத்துள்ளார். எனினும் அவரது குடும்பத்திடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காமல் இருந்தது. அத்துடன் அந்தக் குழந்தை சாலமன் குடும்பத்தினரிடமிருந்து தனிமையை உணர்ந்ததாக தெரிகிறது.

இதனால் சாலமன் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். எனவே மீண்டும் அவர் நூரியை அணுகியுள்ளார். அப்போது நூரி தன்னிடம் வந்திருந்த மற்றொரு ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தையை சாலமனிடம் அளித்துள்ளார். அதன்பிறகு ஆந்திராவில் இருந்து இன்னும் இரு ஹெச்.ஐ.வி பாதித்த குழந்தைகள் சாலமனிடம் வந்து சேர்ந்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து அவர் அரசிடம் அனுமதி பெற்று ‘சேல்டர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அத்துடன் தற்போது இந்த இல்லத்தில் 45-க்கும் மேற்பட்ட ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளன. இவர்களில் பலர் தங்களின் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்களாவர். 

அந்த இல்லத்திலுள்ள குழந்தைகள் சிலர் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்றுவருகின்றனர். மேலும் இந்த இல்லத்திலுள்ள குழந்தைகள் சாலமனை ‘அப்பா’என்று அழைத்து வருகின்றனர். தாங்கள் பெற்ற குழந்தைகளையே சிலர் கொலை செய்யும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறும் நிலையில் தான் பெறாத குழந்தைகளையும் தனது குழந்தையாக பார்த்து கொள்ளும் சாலமனின் செயல் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது.