கைதான கடத்தல்காரர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: போலி மதுபான ஆலை... வெளிநாட்டு மதுபானங்கள் என கடத்தல்காரர்களையே ஏமாற்றிய நபர்!

போலி மதுபான ஆலை நடத்தி அரங்கேறிய புதுவித மோசடி வெளிநாட்டு மதுபானங்கள் எனக்கூறி, புரோக்களையே ஏமாற்றிய "பலே" மோசடி பேர்வழி; சென்னையில் செயல்பட்ட போலி வெளிநாட்டு மதுபான ஆலை.

ஜெ.அன்பரசன்

‘சக்தி’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மதுகுடிக்க Bar-க்கு செல்வார். அப்போது மதுபானத்தில் கலப்பதற்காக வாட்டர் பாக்கெட் விற்கப்படும். அதனை பார்த்து வடிவேலு பாக்கெட் சாராயம் என நினைத்து வாங்கி குடித்துவிட்டு அலப்பறை செய்வார். இதேபோல பாண்டிச்சேரி, கர்நாடகா மதுபானங்களை ‘வெளிநாட்டு மதுபான பாட்டில்’களில் நிரப்பி அவற்றை ‘வெளிநாட்டு மதுபானம்’ என சென்னையில் ஏமாற்றியுள்ளார் ஒரு நபர். அந்த ‘வெளிநாட்டு மதுபானத்தை’ கடத்தல்காரர்கள் மூலம் அந்நபர் கள்ளச்சந்தைக்கு கொண்டுவந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

பறிமுதல் செய்யபப்ட்ட போலி மதுபானங்கள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு பிறகு தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தங்களின் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்கள் விற்பனை, கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் நிறைய இருந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் அவை போலி என்பதும், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடக மதுபானங்களை வெளிநாட்டு மதுபாட்டில்களில் ஊற்றி அவை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

ஆட்டோ டிரைவர் கார்த்திக்

இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் மற்றும் சென்னையைச் சேர்ந்த முகமது நசீம்தீன், ராவூத்தர் நைனார் முகமது, அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும், அந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளன என நம்பி, அவற்றை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு பிறகுதான் அவை அனைத்தும் போலி மதுபானங்கள் என்பது கைதான கடத்தல்காரர்களுக்கே தெரிய வந்தது. கைதானவர்கள் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரிடம் இருந்துதான் அவற்றை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றுவந்ததும் தெரிந்தது.

கைதான கடத்தல்காரர்

கோபி கொடுங்கையூர் பகுதியில் போலி மதுபான ஆலை நடத்தி வந்துள்ளார். காலியான வெளிநாட்டு மதுபான பாட்டில்களை கொண்டு வந்தும், பாண்டிச்சேரி - கர்நாடகா மதுபாட்டில்களை வாங்கியும் அவற்றை வெளிநாட்டு பாட்டிலில் நிரப்பி பலருக்கு அதிக விலைக்கு விற்பனை வந்துள்ளார். அது போலி என தெரியாமலேயே வாங்கிச்சென்று அதனையும் விற்று வந்துள்ளனர் புரோக்கர்கள்.

கோபி தலைமறைவாகிவிட்ட நிலையில் கொடுங்கையூரில் அவரது வீட்டில் இருந்த காலி வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அந்த வீட்டை சோதனை செய்ததில் போலி வெளிநாட்டு மதுபானம் 210 லிட்டர், பாண்டிச்சேரி மாநில மதுபானம் 220 லிட்டர், ஹரியானா மாநில மதுபானம் 19 லிட்டர், 5000 காலி வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் மற்றும் போலி மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.

கைதான கடத்தல்காரர்

இது தொடர்பாக அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரை, டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அமல்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.