சென்னை திநகரில் டாக்டர் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் பெருங்குடி சிவநேசன்(47). இவர் 27 வருடமாக சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது. இவர் தற்போது கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.
சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரானா நோயை கட்டுப்படுத்தும் எனக் கூறி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் கடந்த 8-ம் தேதி சோதனையில் ஈடுபட்டார். அப்போது சோடியம் நைட்ரேட் கரைசலை பரிசோதனைக்காக சிவநேசன் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்க அடைந்த அவரை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் உயிரிழந்தார்.
இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்தது தற்போது உறுதியாகியுள்ளது. அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.