தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முழு கொள்ளளவை எட்ட தயாராகும் சென்னை ஏரிகள்

webteam

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் யாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ளன. அவற்றில், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் 85% நிரம்பியுள்ளன. இதனால் அங்கிருக்கும் நீர் இருப்பு, மதகுகள் சீரமைப்பு குறித்து முதலமைச்சர் நேற்று ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆய்வின்போது, ஆற்று பகுதியை தூர்வாரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்த முதல்வர், நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் குறித்தும் ஆய்வு செய்தார். பின் பேசுகையில், 'தற்போதுள்ள நீர் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை போதுமானது' என்றார்.

அதீத தென் மேற்கு பருவ மழைப் பொழிவு, கிருஷ்ணா நதி நீர் திறப்பு போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் சுமார் 85 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் புழல் ஏரியில் நீர் இருப்பு, ஏரிகளின் மதகுகள் சீரமைப்பு, ஆகாய தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர் வாருதல் போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பிறகு, 2015இல் ஏற்பட்ட வெள்ளம் போன்ற அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் இருப்பதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுகள், வால்வுகள், அடையாறு ஆற்று பகுதியை தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

ஏரிகளில் இருந்து குடிநீருக்கு பயன்படுத்தப்படும் நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை குடிநீர் வழங்க முடியும் என்கிறது சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் துறை.

3,300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மில்லியன் கன அடி உள்ளது. அதே போல், 3,645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கன அடி நீர் உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், நீர் இருப்பு இப்போதே இயல்பைவிட அதிகம் இருப்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து கொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

புழல் ஏரியின் தற்போதைய சில விவரங்கள்: 

  • மொத்த கொள்ளளவு -3,300 மி. கன அடி
  • நீர் இருப்பு - 2,772 மி. கன அடி
  • நீர்வரத்து - 23 கன அடி
  • நீர் வெளியேற்றம் -189 கன அடி

செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய சில விவரங்கள்: 

  • மொத்த கொள்ளளவு - 3,645 மி. கன அடி
  • நீர் இருப்பு - 2,789 மி. கன அடி
  • நீர்வரத்து - இல்லை
  • நீர் வெளியேற்றம் -148 கன அடி

- பால வெற்றிவேல்.