தமிழ்நாடு

செல்போன் திருடியதாக புகார்: ஆத்திரத்தில் குண்டு வீசிய தக்காளி

செல்போன் திருடியதாக புகார்: ஆத்திரத்தில் குண்டு வீசிய தக்காளி

webteam

சென்னை விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த ஆழ்வார் திருநகரில் வசித்து வரும் சுந்தர், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்றிரவு இவர் தனது தாயாருடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் வீட்டின் மீது பாட்டில் ஒன்றை வீசி விட்டு ஓடினர். அது சுவற்றின் மீது விழுந்து வெடித்தது. சத்தம் கேட்டு சுந்தர் வீட்டாரும் அக்கம்பக்கத்தினரும் அச்சமடைந்தனர். தகவலின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தியதில் அது மண்ணெண்ணெய் குண்டு என்பது தெரிய வந்தது. அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுந்தர் நடத்தி வரும் பெட்ரோல் பங்கிற்கு நேற்று வந்த ஒருவர் தண்ணீர் குடிப்பதற்காக வந்து மேஜையில் இருந்த செல்போனை திருடியுள்ளார். இது குறித்து சுந்தர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்போன் திருடன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுந்தர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் திருடும் சிசிடிவி காட்சிகளையும், மண்ணெண்ணெய் குண்டு வீசி சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இதில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதில் ஒருவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி தக்காளி என்பது தெரிய வந்துள்ளது.