செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னையில் நேற்று 7 இடங்களில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர், சுராஜ் ஆகிய 2 பேரை போலீசார், விமானத்தில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்ய போலீசார், பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், நகைகளை பறிமுதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்களது கூட்டாளி சல்மான் என்பவர் ரயில் மூலமாக குறிப்பிட்ட உடையுடன், தங்க நகைகளை கொண்டு செல்வதாக கைதான ஜாபர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் சல்மானின் படத்தை வைத்து சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விஜயவாடா நோக்கிச் செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் பெட்டியில் தேடினர்.
அப்போது கழிவறையில் இருந்த சல்மான் வெளியே வந்தார். அவரை கைது செய்து விசாரித்த போது தன்னிடம் தங்க நகைகள் இல்லை என கூறினார். அதிர்ச்சியடைந்த போலீசார் மீண்டும் ஜாபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தரமணி ரயில் நிலையம் அருகில் மறைத்து வைத்திருப்பதாகவும், தனது கூட்டாளி ஒருவன் சென்னையில் இருப்பதாகவும் அவன் வந்து அதனை எடுத்து விடுவான் என்றும் கூறியதாக கூறபகிறது. இதையடுத்து திருவான்மியூர் காவல் ஆய்வாளர் புகாரி தலைமையிலான போலீசார், ஜாபரை தரமணி ரயில் நிலையத்தின் அருகில் உள்ள மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று தேடினர்.
அப்போது ஜாபர் அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை மிரட்டி தப்பி ஓடியதாகவும் அப்போது தற்காப்புக்காக சுட்டதில் ஜாபர் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இறந்து போன ஜாபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கைதாகியுள்ள சுராஜ் (எ) வேசும் இராணி, சல்மான் ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.