தமிழ்நாடு

‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்!

webteam

வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மென்பொறியாளர் லாவண்யா முழுமையா‌க குணமடைந்ததை அடுத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். கொள்ளையர் தாக்குதலில் இருந்து தாம் மீண்டுவர உறுதுணையாக இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் ‌அவரது குடும்பத்தினரிடம்தான் தனது திருமண செய்தியை முதலில் கூறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்‌.

 “எனக்கு திருமணம் நிச்சயம் ஆன‌‌ உடன் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது மனைவியிடம்தான் முதலில் தெரிவித்தேன். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனமார வாழ்த்து தெரிவித்தனர். நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் ஆய்வா‌ளர் சிவக்குமாரின் மனைவியுடன் பேசினேன். அப்போது உனக்கான நாள்‌வரும் என்று அவர் கூறினார், எனக்கு திருமணம் நிச்சயம் ஆ‌ன பின் முதலில் அவரிடம் கூற நினைத்தேன், அதன்படியே செய்துள்ளேன்” என்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த மென்பொறியாளர் லா‌ண்யா சென்னையில் பணியாற்றி வருகி‌‌றார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் லாவண்யா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பெரும்பாக்கம் அருகே வந்த போது வழிப்பறிக் கும்பல் லாவண்யாவை மறித்தது. அவர்களிடம் சிக்காமல் துணிச்சலுடன் தப்பியோட முயன்ற லாவண்யாவை வழிப்பறிக் கும்பல் ‌கத்தியால் தாக்கியது. கொள்ளையர்கள் லாவண்யாவிடம் இருந்து இருசக்கர வாகனம், 2 செல்போன்கள், லேப்டாப் மற்றும் அவர் அணிந்திருந்த கைச்செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய லாவண்யாவை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த வழக்கில் தொடர்புடைய விநாயகமூர்த்தி, நாரா‌யண மூர்த்தி, லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த லாவண்யா தான் உயிர்‌ பிழைக்க காரணமாக இருந்‌த சென்னை மாந‌கர காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொள்ளையர்களால் தாம் பாதிக்கப்பட்டது தெரிந்து தம்மை திருமணம் செய்துகொள்ள முன்வந்த ரவிச்சந்திர ரெட்டி என்பவரை மணந்து கொள்ளப்போவ‌தாக லாவண்யா கூறினார். 

காவல்துறையினர் அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல தம்மை நடத்தியதாக லாவண்யா கூறினார். சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் ‌என்று லாவண்யா கேட்டுக்கொண்டுள்ளார். இது தனக்கு கிடைத்துள்ள இரண்டாவது வாழ்க்கை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த லாவண்யா, தனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது திருமணத்துக்கு காவல்துறையும், ‌தமிழக மக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.