பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையுடன் அனுமதிக்க நூதன பேரம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையை வைத்து நூதன முறையில் பேரம் நடைபெற்று வருகிறது.
பூந்தமல்லியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு சிகிச்கைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் ஐந்து நாட்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மற்றும் பெட்சீட், தலையணைக்கு தனியாக பத்தாயிரம் என மொத்தம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கட்டவேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த தொகையில் ஏதும் குறைக்க முடியாது என்றதால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை எடுத்து வருகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கும் வேலையை பார்க்குமாறு கூறி சென்றுள்ளனர்.
பணத்தை எடுத்து வருவதற்குள் வேறொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஆக்சிஜன் படுக்கை என்ற பெயரில் நூதனமாக பேரம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
நோயாளிகளின் பொன்னான நேரத்தை பேரம் பேசி வீணாக்கி அவதிக்குள்ளாகி வருவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.