கோயம்பேடு சந்தையில் சொத்துவரி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஒரே நாளில் ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் வரி வசூலாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் சொத்துவரி செலுத்தாத 729 கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்க நேற்று முன் தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். அந்த வழக்கின் இன்றைய விசாரணையில், 461 கடைகளின் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தியுள்ளதாகவும், சிலர் கால அவகாசம் கோரியுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சொத்து வரி செலுத்த மறுத்த 39 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதையும் மாநகராட்சி சுட்டிக்காட்டியது. ஒரே நாளில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் வரி வசூலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, கடை உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்த ஒரு வார கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.