சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அடகுகடையில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடிக்க முயன்றவர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐஸ் ஹவுஸ் பகுதியில் முன்னா லால் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நகைகளை அடகு வைப்பது போல் வந்துள்ளனர். சிறிது நேரம் கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதனைக்கண்டு அங்கு பணி செய்துக்கொண்டிருந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
அப்போது கொள்ளையர்கள் அந்த பெண்ணை தாக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கூடவே மூன்று கொள்ளையர்களில் இருவர் அங்கிருந்து தப்பியோடினர். ஒருவரை பிடித்த பொது மக்கள், ஐஸ்ஹவுஸ் காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர் . பிடிப்பட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்த ரவி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள், 12 தோட்டாக்கள், 2 அரிவாள், செல்போன், 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.