தமிழ்நாடு

அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா ? ஹெலிகாப்டரில் செல்கிறார்கள் ? நீதிபதிகள் கேள்வி

webteam

சாலைகளில் விதிமீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றாத அதிகாரிகள், சாலையில் செல்கிறார்களா? அல்லது ஹெலிகாப்டரில் செல்கிறார்களா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், அதனை கேட்கச் சென்ற தம்மை சிலர் தாக்கியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி முறையிட்டார். முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு, விதிகளை மீறிய பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவற்றுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டும் தமிழக அரசு இதுவரை ஏன் அவற்றை அமல்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் அரசு செயல்படுமா? என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பேனர் குறித்த வழக்குகளும், அதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்து கொண்டே செல்வதாகக் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறினார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், விதிகளை மீறும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியாதா? என்றும், அதிகாரிகள் தங்களின் கண்களை வாடகைக்கு விட்டுவிட்டு ஹெலிகாப்டரிலா செல்கிறார்கள்? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

பேனர் விதிமீறல் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பை செய்து வருவதாகவும் நீதிபதிகள் கூறினர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் வானளாவிய அதிகாரத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். பின்னர் கோரிக்கையை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைப்பு மனுவாக தாக்கல் செய்யுமாறு டிராஃபிக் ராமசாமிக்கு உத்தரவிட்டனர்.