தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மீது இந்திய கடலோர காவல்படையினரிடம் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 6 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி மீனவர்கள் நல அமைப்பை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கொண்ட அமர்வு, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அத்துடன் வழக்கையும் முடித்து வைத்தனர்.