தமிழ்நாடு

வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு தணிக்கை : அக்டோபரில் இறுதி விசாரணை

வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு தணிக்கை : அக்டோபரில் இறுதி விசாரணை

webteam

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 14 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சமூக வலைதளங்கள், சினிமா வலைதளங்கள், ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும்.

ஊரடங்கால் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார்,சோனி லைவ், எம்.எக்ஸ். பிளேயர், ஜீ பைவ், பிஹைண்ட்வுட்ஸ், கலாட்டா டாட் காம், சினி உலகம், இந்தியா கிளிட்ஸ் ஆகியவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் சினிமாவை அடிப்படையாக கொண்ட இந்த தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை எவ்வித தணிக்கையும் இல்லாமல் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.