கூட்டம் கூடுவதன் மூலம் பரவும் கொரோனவை கட்டுப்படுத்த வருகிற மே 1 மற்றும் 2ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் ஆகியவற்றின்ன் கையிருப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் விளக்கம் அளித்தன. அப்போது அவர்கள் அளித்த விளக்கத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவை முழுமையாக விரட்டியடிப்பதற்கு அனைவரும் இணைந்துதான் பாடுபட வேண்டும். அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும்தான் இந்த கொரோனா பரவலுக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
இன்று மதியம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் இருந்து 1015 டன் ஆக்சிஜன் உற்பத்தியை மருத்துவ பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றியமைக்க தயாராக இருப்பதாக உத்திரவாதம் அளித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. அதேபோல தமிழகத்தின் அனுமதி இல்லாமல் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்த நிலையில் மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்ததால் அது முழுமையான ஊரடங்காக அமைந்தது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதியன்றும் அதற்கு முதல்நாள் மே 1ஆம் தேதியும் அரசு விடுமுறையாக இருப்பதால் அன்றைய தினமும் முழு ஊரடங்கை அமல்படுத்த புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் ஆலோசிக்க வேண்டுமென்று பரிந்துரை வழக்கினர்.
அதேசமயம் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் ஊரடங்மை அமல் படுத்தலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் முடிவெடுத்து இந்த மாதம் 28ஆம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டம் கூடுவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாததால்தான் கொரோனா பரவல் அதிகமாகியிருக்கிறது. அதனால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இரண்டு நாட்கள் ஊரடங்கை அமல்படுத்து பரிந்துரை செய்கிறோம். இதில் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.