தமிழ்நாடு

சாலைகள் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

சாலைகள் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

webteam

சாலைகளை தோண்டி எடுக்காமல் ,அவற்றின் மீதே மீண்டும் சாலைகளை அமைப்பது ஏன் என தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலைத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழைய சாலைகளை தோண்டாமல் சாலை அமைக்கப்படும்போது சாலைகள் உயரமாகி வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்குவதாக மயிலாடுதுறை வர்த்தக சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாலைகள் அமைக்கும் போது பழைய சாலைகளை தோண்டி எடுத்த பிறகே அமைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை பின்பற்றி சாலைகள் அமைக்கப்படுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரை கண்காணிக்கும் அதிகாரிகளை பொறுப்பு ஏற்க செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆகியோரை வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.