தமிழ்நாடு

தனியார் உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

தனியார் உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களை இடிப்பது மற்றும் இடர்பாடுகளை அகற்றுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தனர். இறக்குமதி செய்யபட்ட இந்த வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க தடைக்கோரி கடந்த 2008ம் ஆண்டு இந்த தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நுழைவு வரி செலுத்தக்கூடிய நிலையில் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து, கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்களின் இயக்குனர்களையும் செப்டம்பர் 6ம் தேதி ஆஜர்படுத்தும் வகையில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறக்குமதி செய்யபட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தி விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 2 தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, இரு தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.