தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடையை நீக்க வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

Sinekadhara

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக்கோரி சிலை அமைய உள்ள இடத்துக்கு உரிமையாளரான ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் முகமது ரபிக் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தனியார் பட்டா நிலத்தில் சிலை வைப்பதை எதிர்த்து எப்படி பொதுநல வழக்கு தாக்கல் செய்யமுடியும் என கேள்வி எழுப்பி இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனியார் நிலமாக இருந்தாலும் சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் கூறி விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். நாளை நடக்கவிருந்த சிலை திறப்பு விழாவை வேறு தேதிக்கு மாற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் சிலை திறக்க தடை விதித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் இடைக்கால உத்தரவு தொடர்கிறது.