தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவு

Rasus

சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தனது வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பளித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச‌ ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கான தனி கவுண்டர்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த கவுண்ட்டர்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதலாக ஒப்பீட்டு முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்தாக இருக்கும் பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பெரிய அளவிலான திட்டப்பணிகளில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், செயற்பொறியாளர், மண்டல அலுவலர் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, சென்னை மாநகராட்சி நில ஆக்கிரமிப்பு குறித்து 4 வாரத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ‌என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார். எனினும், அறிக்கை தாக்கல் செய்வதற்காக மட்டும் வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.