பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடு ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் காவல்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் மீது பல விமர்சனங்களை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வழக்கை சென்னை காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும், பின்னர் அதை அதிகாரிகளின் வருமானத்தில் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதி ஒத்திவைத்தது.