தமிழ்நாடு

லெட்டர் பேடு வழக்கறிஞர்களுக்கு செக்? உயர்நீதிமன்றம் அதிரடி

லெட்டர் பேடு வழக்கறிஞர்களுக்கு செக்? உயர்நீதிமன்றம் அதிரடி

webteam

தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று சில கருத்துக்களை கூறிய நீதிபதி கிருபாகரன், கல்லூரிக்கே செல்லாமல் சிலர் வழக்கறிஞர் ஆவதால், கட்டப் பஞ்சாயத்து அதிகமாகிவிட்டது. வழக்கறிஞர் தொழிலை நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கவலை தெரிவித்தார். பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர் சங்கம் இப்பிரச்னையையும் முன்னெடுக்க வேண்டும் என்றார். 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதத்தை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். கல்லூரிக்கு செல்லாமலே தொலைதூரக் கல்வி மூலம் வேறு மாநிலங்களில் சட்டம் படிப்பவர்களால்தான் இந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதம் கெடுகிறது எனவும் அவர் கவலை தெரிவித்தார். 


இந்நிலையில் தமிழக வழக்கறிஞர்களின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் லெட்டர் பேடு கல்லூரிகளில் பணம் கொடுத்து சட்டப்படிப்பை விலைக்கு வாங்குவதாகவும், ஆகையால் லெட்டர் பேடு சட்டக்கல்லூரிகள் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் போலி வழக்கறிஞர்களை நீக்கிய பிறகே தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.