தமிழ்நாடு

இதுதான் கடைசியா இருக்கணும்: ஐகோர்ட் கண்டனம்

இதுதான் கடைசியா இருக்கணும்: ஐகோர்ட் கண்டனம்

webteam

ஜாதி, சமூக பொருளாதார அடிப்படையில் 5 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலுக்குள் கடந்த 2010 ஜனவரி 2ஆம் தேதி இரவில் குமார், மாரி, ராஜா, செல்வம் மற்றும் பழனி ஆகியோர் நுழைந்து உண்டியலை உடைத்து 500 ரூபாயை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு கோவிலுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணி தடுத்தபோது ஐந்து பேரால் கட்டை மற்றும் கடப்பாரையால் தலையில் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதுதொடர்பாக, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதிமன்றம், ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, குமார் தவிர மற்ற நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ். நாகமுத்து, என். சேஷசாயி அடங்கிய அமர்வு ஐந்து பேர் மீதான ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தீர்ப்பு விவரம்:

குற்ற நடவடிக்கைகளின் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்காமல் திருட்டை தொழிலாக கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது கேலிக்கூத்தானது. அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. எனவே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை யை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது. குற்ற நடவடிக்கைகளின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்க கூடாது. இதுபோல ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்பு இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில், ஜாதி அடிப்படையில் எந்த தீர்ப்பும் வரக்கூடாது என்பதற்காக, இந்த உத்தரவை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.