தமிழ்நாடு

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Veeramani

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்த மணிகண்டன் என்பவர், தேர்தல் பரப்புரையையும், டாஸ்மாக் கடைகளுக்கான அனுமதியையும் சுட்டிக்காட்டினார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வரும் சூழலில், திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கினால் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எப்படி? என கேள்வி எழுப்பினர். மக்களின் நலன் கருதியே அரசு இதுபோன்ற உத்தரவினை பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.