chennai high court
chennai high court pt
தமிழ்நாடு

கோயம்பேடு சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

யுவபுருஷ்

செய்தியாளர் - முகேஷ்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசுத்தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும். ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கரில் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதி தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால், மறு உத்தரவு வரும்வரை அந்த இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க பயன்படுத்தலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவில், “ கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகள் முடிச்சூர் கேரேஜுக்கு மாற்றப்பட்டு விட்டால், கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்துவிடும். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் கேரேஜ்கள் பொதுமக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வரை அதனை தொடர்ந்து அனுமதிக்கலாம்.

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் இயக்க கூடாது. ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.